

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94. இவர், முன்னாள் அதிபர் ஜூனியர் புஷ்ஷுன் தந்தை. மரணடைந்த சீனியர் புஷ் குறித்த 10 முக்கிய தகவல்கள்:
1) இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய சீனியர் புஷ், அப்போது ஜப்பான் விமானப்படை தாக்குதலில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இவர் பயணம் செய்த கப்பலை குறி வைத்து ஜப்பான் தாக்குதல் நடத்தியபோது, அங்கு வந்த அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் இவரை பத்திரமாக காப்பாற்றியது.
2) ராணுவத்தில் இருந்து விலகிய சீனியர் புஷ் 1960களில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்தார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் அதில் பெரும் பணம் சம்பாதித்தார்.
3) வர்த்தகத்தில் சேர்த்த பணத்துடன் புகழும் சேர அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். குடியரசுக் கட்சியில் சேர்ந்த அவர் பல பொறுப்புகளை வகித்தார். கட்சியின் தலைவர் பதவியையும் கைபற்றினார்.
4) அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். இதுமட்டுமின்றி மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டு வென்றார்.
5) 1980-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக பெரும் பிரயாசை செய்தார். ஆனால் ரொனால்டு ரீகனிடம் தோற்றுப் போனார். எனினும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வென்றார்.
6) நீண்டகால அரசியல் போராட்டத்தில் 1988-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
7) அமெரிக்க அதிபராக சீனியர் புஷ் பதவியேற்ற காலம் முக்கியமானது. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டம். அப்போது 1990-ம் ஆண்டு நடந்த வளைகுடா போர் மிக முக்கியமானது. குவைத் நாட்டை ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆக்ரமிக்க அவருக்கு எதிராக அணி வகுத்தார் சீனியர் புஷ். உலக நாடுகளை சதாமுக்கு எதிராக திரட்டி வெற்றி கண்டார். குறிப்பாக அரபு நாடுகளையும் அமெரிக்கா பக்கம் ஈர்த்து சதாமை சாய்த்து அவரது ராஜ தந்திரமாக பார்க்கப்பட்டது.
8) வளைகுடா போரால் புகழின் உச்சியை தொட்ட சீனியர் புஷ், 1992-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பில் கிளிண்டனிடம் தோற்றுபோனது அதிர்ச்சி நிகழ்வே.
9) அமெரிக்காவில் வாரசு அரசியல் என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். எனினும் சீனியர் புஷ்ஷை வாரிசு அரசியலின் தந்தை என்றே அமெரிக்க ஊடகங்கள் வர்ணிக்கும். சீனியர் புஷ்ஷுன் மகன் ஜார்ஜ் புஷ் தந்தையுடன் வசித்த அதே வெள்ளை மாளிகைக்கு அதிபராக திரும்பி வந்து 8 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். மற்றொரு மகன் ஜெப் புளோரிடா மாகாண ஆளுநராக பதவி வகித்தார். அதுபோலவே புஷ் குடும்பத்தைச் சேரந்த பலர் மாகாண அளவில் பல பதவிகளை வகித்தனர். ஆறு குழந்தைகளின் தந்தையான சீனியர் புஷ்ஷூக்கு ஏராளமான பேரன், பேத்திகளும் உண்டு. இதனால் அவரது குடும்பம் மிக பெரியதாக திகழ்ந்தது.
10) அதிபர் பதவியை விட்டு விலகியபோதிலும் நீண்டகாலம் அவர் பொது வாழ்க்கையில் இருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், சுனாமி நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார். தான் சார்ந்த குடியரசு கட்சி வேட்பளர் ட்ரம்புக்கு எதிராக கடந்த தேர்தலில் சீனியர் புஷ் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.