

அமெரிக்கப் பள்ளி ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவன் 21 மாணவர்களையும், ஒரு பாதுகாவலரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரத்தில் பிராங்க்ளின் ரீஜினல் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு பயிலும் அலெக்ஸ் ஹரிபால் எனும் 16 வயது சிறுவன் புதன்கிழமை காலை சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கத்திகளுடன் பள்ளி வந்தான்.
வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்தவித குறிக்கோளுமின்றி பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் கடுமையாகத் தாக்கினான். இதில் 21 பேருக்குக் காயம் ஏற்பட்டது. ஐந்து மாணவர்கள் அதிக காயங்களுடன் உயிர் தப்பினர். ஒரு மாணவனுக்கு குடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
காவலர்கள் அவனைக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தான் இறக்க விரும்புவதாக அவன் தெரிவித்துள்ளான். அவன் மீது நான்கு கொலை முயற்சி வழக்குகளும், 21 தாக்குதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவனுடைய வயது 16 ஆக இருந்தபோதும், இந்த வழக்குகளில் அவன் சிறுவனாகக் கருதப்படாமல் வயது வந்தவனாகவே கருதப்படுவான் என்று மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பள்ளிகள் அனைத் தும் எதிர்பாராத துப்பாக்கிச்சூடு போன்றவற்றைச் சமாளிக்கும் திறன் கொண்டிருந்தாலும், இவ்வகையான கத்திக் குத்தல்களுக்குத் தயாராக வில்லை. இதனால் அந்தப் பள்ளியில் சம்பவ தினத்தன்று நெரிசல் ஏற்பட்டு, சுவரிலும் தரையிலும் ரத்தம் வழிந்தோடியது.