

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொடூர தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் சீக்கியர் அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசிப்பவர் சந்தீப்சிங் (வயது 29). இவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது உரசியது.
அப்போது கோபமடைந்த சந்தீப், லாரி டிரைவரை கீழே இறங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த லாரி டிரைவர், 'தீவிரவாதி, உன் நாட்டிற்கே செல்' என்று இனவெறியுடன் பேசியதோடு, லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து கிளப்ப முயன்றார்.
லாரியை சம்பவ இடத்திலிருந்து செல்லவிடாமல், சந்தீப்புக்கு நெருங்கியவர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் அந்த டிரைவர் லாரியை சந்தீப்சிங் மீது மோதி, அவரை 30 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்துச்சென்றார்.
இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த சந்தீப், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நியூயார்க் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சந்தீப் சிங் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கேட்டும் அமெரிக்காவில் இன்று சீக்கியர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இதற்கு பல்வேறு இந்திய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
கடந்த 2012-ம் அண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓக் கிரீக் குர்டுவாராவில் நடந்த இனவெறி தாக்குதலில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப்பின் மனைவி பிரப்ரீத் கவுர், "எனது கணவர் மீதான தாக்குதல், தனி மனிதர் மீதான தாக்குதல் இல்லை. இங்கு தொடர்ந்து நடக்கும் சீக்கியர்கள் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடுதான்.
விபத்து ஏற்பட்ட பின், சீக்கியர் என்று தெரிந்ததை அடுத்து என் கணவர் மீது அந்த டிரைவர் வேண்டுமென்றே லாரியை செலுத்தி சாலையில் இழுத்து சென்றுள்ளார். தற்போது என் கணவர் உயிருக்கு போராடி வருகிறார். அவரது பாதி உயிர் ஏற்கெனவே போய்விட்டது. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். அந்த டிரைவர் குறித்த தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், எங்களிடம் அதனை அளித்து நியூயார்க் மக்கள் உதவ வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தீப் சிங், போலீஸிடம் அளித்த ஒலிப்பதிவில், "நான் சீக்கியர் என்பதாலேயே தாக்கப்பட்டேன். மிகுந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் உயிர் பிழைத்து விடுவேன். எனக்கு நேர்ந்த சம்பவம் இனி வேறு ஒரு சீக்கியருக்கு நடக்க கூடாது என்றே நான் நினைக்கிறேன். சீக்கியர்களுக்கு அமெரிக்காவில் நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.