

பாகிஸ்தானில் சீன தூதரகத்தின் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸார் தரப்பில், ‘‘பாகிஸ்தானில் தெற்கு கடலோர நகரமான கராச்சியில் உள்ள சீன தூதரகத்தின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் போலீசாருக்கும், அந்த நபர்களுக்கும் இடையே கடும் சண்டை நிலவியது.
இதில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர். இந்த கடும் சண்டை காரணமாக அப்பகுதியில் கடும் புகை பரவியது. தொடர்ந்து சண்டை நிலவி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் நுழைவாயில் வழியாக சீன தூதரகத்தின் உள்ளே நுழைய முயன்றனர் என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரியான அஷ்பக் தெரிவித்தார்.
சமீபகாலமாக பாகிஸ்தானில் அயல் நாட்டு தூதரக அலுவலங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.