ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் திட்டவட்டம்

ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது: இலங்கை சபாநாயகர் திட்டவட்டம்
Updated on
1 min read

ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக ஏற்க முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை  நாடாளுமன்றம்  7 ஆம் தேதி கூடும் என்று அறிவித்திருந்த அதிபர் சிறிசேனா பின்னர் தனது முடிவை மாற்றி  நாடாளுமன்றம்  வரும் 14 ஆம் தேதி கூடும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து சபாநாயகர்  கரு ஜெயசூர்யா இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில் , ”நாடாளுமன்றத்தை 7 ஆம் தேதி கூட்டுவதாக அறிவித்து அதனை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது ஏன்?நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சேவின் நியமனம் சட்ட விரோதம் என்பதை ஏற்கிறேன்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை  நிரூபிக்கும்வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. பெரும்பான்மையை  நிரூபிக்கும்வரை ரணில்தான் இலங்கையின்  பிரதமர்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை  தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பதற்குச் சமம் என்று பிரதமர் பதவியிலிருந்து சிறிசேனாவால் நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே விமர்சித்துள்ளார். இதற்கிடையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக, வாக்களிக்க உள்ளதாக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

மேலும், இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கே கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்தச் சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது. புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நானே பிரதமர் என ரணில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ரணில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளது.

இதனால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி இருந்தார். நாடாளுமன்றத்தைக் கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜ பக்சே தோல்வியடையக்கூடும் என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in