Last Updated : 28 Nov, 2018 12:21 PM

 

Published : 28 Nov 2018 12:21 PM
Last Updated : 28 Nov 2018 12:21 PM

‘பிளாக் பாக்ஸ்’ தகவல் வெளியானது: இந்தோனேசிய லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது?- 11 நிமிடங்களில் 26 முறை டைவ்

இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் (Black Box) தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த அக்டோபர் 29-ம் தேதி காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது.

விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.

நீண்ட தேடுதலுக்குப்பின் விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு, அதன் முதல்கட்ட அறிக்கையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

போயிங் விமானத்தின் முன்னாள் பொறியாளரும், செயற்கைக்கோள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பீட்டர் லேமே தலைமையிலான குழு பிளாக் பாக்ஸை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், “விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் மூக்குப்பகுதியை கீழ்நோக்கி இழுத்துள்ளது. விமானத்தின் கேப்டன் விமானத்தைப் பல முறை மேல்நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் விமானத்தின் மூக்குப்பகுதி கீழ்நோக்கியே சரிந்துள்ளது. இதனால், கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் சுருக்கம், இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது முதல்கட்ட அறிக்கைதான், இன்னும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்சாரில் இருந்து தவறான சமிக்ஞைகள் ஏதும் வந்ததா, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி சரிந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

11 நிமிடங்களில் 24 முறை

பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்த பொறியாளர் பீட்டர் லேமே கூறுகையில், “விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு சாதனம் செயலிழந்திருக்கக் கூடும் அல்லது தானியங்கி பாதுகாப்பு சாதனத்துக்கு சென்சாரில் இருந்து தவறான தவறான தகவல் தரப்பட்டு இருக்கும். அதனால்,தான் விமானத்தின் மூக்குப் பகுதி கீழ்நோக்கி தரையை நோக்கிச் சரிந்துள்ளது. ஆனால் விமானி பலமுறை விமானத்தை மேல்நோக்கி மிக உயரமாகப் பறக்கவைக்க முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் 26 முறை இதேபோன்று விமானத்தை மேல்நோக்கி விமானத்தைப் பறக்க வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், விமானம் டைவ் அடித்துள்ளது. ஆனால், கேப்டனால் எதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நூற்றுக்கணக்கான உயிர்களுடன் விளையாடிய ஆபத்தான விளையாட்டாகிவிட்டது.

அதேசமயம், சென்சாரில் இருந்து தவறான தகவல் ஏதும் தரப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினை பல்வேறு விமானங்களில் நடந்துள்ளது. இந்தப் பிரச்சினையை போயிங் நிறுவனத்தினர் சரி செய்தார்களா எனத் தெரியவில்லை. சரி செய்திருந்தால், விபத்து நிகழ்ந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே போயிங் நிறுவனத்திடம் இது குறித்து கேட்பதற்காகப் பலமுறை மின்அஞ்சல் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்ந்து கொண்டும் செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால், அந்த நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x