Published : 09 Aug 2014 10:42 AM
Last Updated : 09 Aug 2014 10:42 AM

தாக்குதலை தொடங்கியது ஹமாஸ்: காஸாவில் மீண்டும் போர்

72 மணி நேர தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவடைந்தவுடனேயே இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத் தத்தை நீட்டிக்க மறுத்து முதல் தாக்குதலை ஹமாஸ் தொடுத் துள்ளது.

இஸ்ரேல் பதில் தாக்குதலில் இறங்கியுள்ளது. காஸா மீதான தாக்குதலை அதி தீவிரத்துடன் மேற்கொள்ள ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத் தினரிடையே கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், காஸா தரப்பில் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1,900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள்.

இப்போரை முடிவுக்குக் கொண்டு வர எகிப்து தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்காலிக போர் நிறுத் தத்தை நீட்டிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. ஆனால், ஹமாஸ் மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தக் கெடு வெள்ளிக்கிழமை காலை முடிவடைந்தது. சர்வதேச நேரப் படி காலை 5 மணிக்கு காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ராக் கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலின் தெற்குப் பகுதி மீது 10-க்கும் அதிகமான ராக்கெட்கள் ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரி வித்துள்ளது. ஆனால், இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பாஸி பர்ஹும் கூறும்போது, “ஹமாஸ் உட்பட பாலஸ்தீனத்தின் அனைத்துத் தரப்பினரும், போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இஸ்ரேல் தரப் பில் பாலஸ்தீனத்தின் கோரிக்கை களை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால், எகிப்து தலைநகர் கெய் ரோவில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு ஆகியவை முதலில் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண் டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காஸா எல்லையைத் திறந்து விடுவது தொடர்பான உடன்படிக் கையில் சில வார்த்தைகள் மாற்றப் பட்டதால், ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை. இஸ்ரேல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள 125 முக்கிய நபர்களை விடுவிப்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை ஹமாஸ் முன் வைத்துள்ளது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது.

போர் நிறுத்தத்துக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கருத்து தெரிவிக்க மறுத்து விட் டார். ஆனால், பாதுகாப்பு அமைச் சரவையின் உறுப்பினர் பென்னட் பதில் தாக்குதல் கடுமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “எகிப்தி லிருந்து தனது பிரதிநிதிகளை இஸ்ரேல் திரும்பப் பெறவேண்டும். இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்கு தல் நடத்தப்படும் சூழலில் நாம் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது. இது இஸ்ரேலின் தற்காப்புக்கு விடப்படும் சவால். பதிலடி மிகக் கடுமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டதால் தனது ராணுவத்தைத் திரும்பப் பெற்ற இஸ்ரேல், காஸா எல்லையில் மீண்டும் படை பலத்தை அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் பதில் தாக்குதலைத் தொடங்கத் தயாராக உள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, ராணுவ அணைச்சர் ஆகியோர், பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தர விட்டுள்ளனர். காஸாவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள் இஸ்ரேலின் குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x