

2017-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டு, 0-19 வயதுக்குட்பட்டோர் 1.20 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். தெற்காசியாவில் இது மிக அதிகபட்சம் என்று யூனிசெப் என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த அளவைத் தடுக்காவிட்டால், 2030-ம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயால் நாள் ஒன்றுக்கு உலக அளவில் 80 பேர் உயிரிழப்பார்கள் என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.
யூனிசெப் அமைப்பு, “ குழந்தைகள், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ்: 2030-ல் உலகம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 0-19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பதின்வயதினர் எச்ஐவி வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு 1.20 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இது தெற்கு ஆசியாவில் இந்தியாவில்தான் இது அதிகமாகும்.
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானில் 5,800 பேரும், நேபாளத்தில் 1,600 பேரும், வங்கதேசத்தில் ஆயிரத்துக்கும் குறைவாகவும் வாழ்கின்றனர்.
2017-ம் ஆண்டில் எச்ஐவி வைரஸ் பாதிப்பு உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட அளவு கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைந்து இருக்கிறது. உலக அளவில் 35 சதவீதம் குறைந்திருக்கிறது.
0-14வயதுக்குட்பட்ட குழந்தைகளை எச்ஐவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு வாழ்பவர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
எச்ஐவி பரவுவதை தடுக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்தாவிட்டால், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு உலக அளவில் 80 பேர் உயிரிழப்பார்கள். இப்போதுள்ள அறிக்கையின்படி, எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள், புதிய தொற்றுகள் பரவுவது குறைந்துள்ளது. ஆனால், தாக்கத்தின் குறைவு எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை.
5 வயதை அடையாமலேயே பெரும்பாலான குழந்தைகளை எய்ட்ஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். கருவுற்ற தாய்கள் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுவது, அதைத்தடுக்கும் வழிமுறைகள் இன்னும் வேகப்படுத்தப்படவில்லை. அதேசமயம், கடந்த 8 ஆண்டுகளாக இதைத்தடுக்கும்முறைகளால் நோய்பரவும் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை 14 லட்சமாகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது, தற்போது 19 லட்சமாக இருக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் குழந்தைகள் மற்றும் பதின்வயதினரிடேயே எய்ட்ஸ் நோய் முடிவுக்குவந்துவிடும் என்று இந்த அறிக்கை சந்தேகமின்றி கூறுகிறது என்று யுனிசெப் தலைவர் ஹென்ரிட்டா போர் தெரிவித்துள்ளார்.