

கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக பெய்ஜிங் நகரின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
உலகின் மிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் 137 கோடியே 67 லட்சம் பேர் வசிக்கின்றனர். எனினும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் சீன தலைநகர் பெய்ஜிங் 6வது இடத்தில் உள்ளது. சுமார் 2 கோடியே 17 லட்சம் பேர் நிரந்தரமாக வசிக்கின்றனர்.
இதைத்தவிர பல லட்சம் பேர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மிகவும் சிறிய நகரமான அங்கு அதிகமானோர் வசிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிகமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளை அந்த நகரம் சந்தித்து வருகிறது.
இதையடுத்து பெய்ஜிங் நகரத்தின் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையை சீனா கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பெரிய கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகிறது. இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் வாங்க கட்டுப்பாடு, அத்துடன் கூடுதல் வரி போன்றவையும் விதிக்கப்படுகிறது.
இதுபோலவே பெய்ஜிங் நகருக்கு அருகில் சில கிலோ மீட்டர் தொலைவில் துணைகோள் நகரங்களையும் உருவாக்கி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற போதிலும், 20 ஆண்டுகளாகவே பெய்ஜிங் நகர மக்கள் தொகை குறையவில்லை. ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக பெய்ஜிங் மக்கள் தொகை தற்போது குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பெய்ஜிங் மக்கள் தொகை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 22 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. ஏறக்குறைய 3 சதவீதம் அளவுக்கு மக்கள் தொகை குறைந்துள்ளது பெய்ஜிங் நகர மேம்பாட்டு நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலத்துக்கு பிறகு நடவடிக்கைக்கு பயன் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.