Published : 04 Nov 2018 12:26 AM
Last Updated : 04 Nov 2018 12:26 AM

இந்தியாவும் ஜப்பானும் நண்பேன்டா...

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் காலம் தொடங்கி இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது. ஆனால் அந்த உறவு பொருளாதாரரீதியாக மிகப்பெரிய வெற்றியடையவில்லை.  பொன்னான பல வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோமே என்று இருநாடுகளும் இப்போது உணரத் தொடங்கியுள்ளன.

கடந்த அக்டோபர் இறுதியில் ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளின் அரசியல், பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக ஆலோசனை நடத்தினர்.

அபேவை சந்தித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மோடி, ‘‘இணையம், சுகாதாரம், பாதுகாப்பு, கடல் பிராந்தியம் முதல் விண்வெளி வரை என அனைத்து துறைகளிலும் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றும்’’ என்று தெரிவித்தார். இதை உறுதி செய்யும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே ரூ.5,46,862 கோடி மதிப்பில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் இந்திய ரூபாயின் மதிப்பும் முதலீடுகளும் உயர்ந்துள்ளன. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார சந்தையில் ஜப்பான் முக்கிய பங்குதாரராக உள்ளது. பல்வேறு  துறைகளில் அந்த நாடு பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. குறிப்பாக மின் உற்பத்தி, போக்குவரத்து, சுற்றுச்சூழல், அடிப்படை கட்டமைப்புகளை  நிர்மாணிக்க ஜப்பான் தாராளமாக நிதியுதவி செய்து வருகிறது.  மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு 80 சதவீத நிதியை ஜப்பான் வழங்குகிறது. இந்த திட்டத்துக்காக ஐம்பது ஆண்டு கால தவணையில் 0.1 சதவீத வட்டியில் ரூ.79,000 கோடி வழங்க அந்த நாடு முன்வந்துள்ளது. கடனை அடைக்க 15 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. டெல்லி, சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களிலும் ஜப்பான் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. இப்போதைய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஆசிய பசிபிக் அல்லது இந்திய பசிபிக் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள சவால்களைச் சமாளிக்க இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன.  சர்வதேச அரங்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற வகையில் அதிபர் ட்ரம்ப் அரசு செயல்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளின் வர்த்தக நலனில் அமெரிக்கா அக்கறை காட்டாததால் இந்தியா, ஜப்பான் மீதான சுமை அதிகரித்துள்ளது.

ஜப்பானின் பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவம் அந்த நாட்டில் முகாமிட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் பணிகளுக்கான ஜப்பானின் நிதி பங்களிப்பு போதுமானதாக இல்லை என்று அமெரிக்கா அடிக்கடி சுட்டிக் காட்டுகிறது. இதன்காரணமாக இருநாடுகளின் உறவில் சில விரிசல்கள் விழுந்துள்ளன.

அதே நேரம் ஆசியாவிலும் அதை தாண்டியும் சீனாவை எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, ஜப்பான் இடையிலான நெருக்கம் இயல்பாக அதிகரித்து வருகிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஷின்சோ அபே அண்மையில் சீனா சென்று வந்தார். இதேபோல மோடியின் அண்மைக்கால சீனப் பயணங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடலை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனாவுடன் மல்லுகட்ட ஜப்பான் தயாராகிவிட்டது. அதேநேரம் சீனாவின் கண்ணசைவில் செயல்படும் வடகொரியாவின் மீதும் ஜப்பான் தனது பார்வையை ஆழமாகப் பதித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சுருக்கமாக சொல்வதென்றால் தெற்காசியா, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் ஜப்பானும் தோளோடு தோள் சேர்த்து நிற்கின்றன. அதேநேரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பொருளாதார தடைகளைத் தகர்த்தெறிய இந்தியா, ஜப்பான், சீனா ஓரணியில் அணிவகுக்கவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

- டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x