இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு: 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு: 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல்
Updated on
2 min read

பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார்.சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தததால் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ராஜபக்சே பிரதமராக ஏற்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தார். ஆனால், திடீரென நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறும் நோக்கில் அதிக எம்.பி.க்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறும் நோக்கில் அதன் தலைவர் ரா. சம்பந்தனைச் சந்தித்து அதிபர் சிறிசேனா பேசினார். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு, ரணிலுக்கு தங்கள் வழங்கும் ஆதரவில் உறுதியாக இருந்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பேச்சு நிலவியது. இந்நிலையில், நேற்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் ேததி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கலைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நேற்று இரவு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. அதன்பின் அந்த கட்சியின் மூத்த தலைவரும், நிதிஅமைச்சராக இருந்தவருமான மங்கல சமரவீரா “தி இந்து”விடம்(ஆங்கிலம்) பேசியபோது, ‘‘அதிபர் சிறிசேனாவின் இந்த முடிவை எதிர்தது நிச்சயம் நீதிமன்றம் செல்வோம்.

அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக கண்டன தீர்மானமும் கொண்டுவருவோம். ஏனென்றால், நாட்டை அவர் நாட்டையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவிட்டார், ஜனநாயகத்தை அச்சுறுத்திவிட்டார். எங்கள் கட்சி தேர்தலைச் சந்திக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது. அதேசமயம் இந்த நாடாளுமன்ற கலைப்பை எதிர்ப்பது அவசியம். ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தையே அப்பட்டமாக மீறிய செயலாகும்’’ எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்குமா என்று ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியாவிடம் தி இந்து சார்பில் கேட்டபோது, அவர் எந்த கருத்தையும் கூற மறுத்துவிட்டார். அதேசமயம், தேர்தல் நடத்தும் தேதியை முடிவு செய்ய அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. தேர்தல் நடத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in