

பிரிட்டனின் லண்டன் நகரில் ஹிந்து கோயில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள உலகின் முதல் கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது.
லண்டன் நகரில் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி என்ற இடத்தில் ரூ.201 கோடி செலவில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்திய கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுவதற்காக கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மழைநீரை சேகரிக்கும் வகையிலும் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கோயிலில் பல்வேறு கலை நுணுக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத உலகின் முதல் பசுமை கோயில் என்ற பெருமைமைப் பெறுகிறது.
இந்த கோயிலின் திறப்பு விழா சர்வதேச ஆன்மிக தலைவர் ஆச்சார்ய சுவாமிஸ்ரீ மஹராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 6 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் நடனம், இசை, தெரு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.