

அசியா பீபி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் இம்ரான் கான் கூறும்போது, ”பாகிஸ்தானில் நிறுவப்பட்ட கொள்கைகளை நாம் பின்பற்றாமல் இருந்தால் பாகிஸ்தானுக்கு எதிர்காலமே இல்லை. நாம் நமது இறைவனை நேசிக்காவிட்டால் நமது முழு நம்பிக்கையும் முழுமையடையாது.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருகப்பவர்கள் மாகாண அரசுடன் மோதலை ஏற்படுத்தாதீர்கள். பொது மக்களின் பாதுகாப்பு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்று உறுதி அளிக்க வேண்டும்.
உங்கள் வாக்கு வங்கிகாக நாட்டை துன்புறுத்தாதீர்கள். நீங்கள் இதனை தொடந்தால் அரசு தனது கடமையை செய்யும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கிறிஸ்தவரான அசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்போது,அவர்கள் கிறிஸ்தவரிடமிருந்து தாங்கள் தண்ணீர் வாங்க மறுத்ததுடன், அவரை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும் வற்புறுத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து அசியா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் அவர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டார் என்று அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அசியா தரப்பு மறுத்து வந்தது. அசியாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
அசியாவின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் தீவிர மதபற்றாளர்கள் பலர், அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் பல இடங்களில் வன்முறை நிலவுகிறது.