

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சீன அதிகாரிகள் தரப்பில், ”சீனாவின் வடக்கே உள்ள சான்ஜியகோ நகரத்தில் உள்ள ஹேபை ஷின்குவா ரசாயனத் தொழிற்சாலையில் இன்று (புதன் கிழமை) பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கு இரையாகின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெடி விபத்து ஏற்பட்ட இடத்துக்கு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்று அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் சீன மக்கள் தொகையைப் பொறுத்து அந்நாட்டில் தொழில் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பில் குறிப்பாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பில் சீன அரசு கவனமாகச் செயல்படாததால் விபத்து ஏற்படுவது அதிகரித்து வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு தியாஜினில் உள்ள ரசாயன சேகரிப்புக் கூடத்தில் நடந்த வெடி விபத்தில் 173 பேர் பலியாகினர். கடந்த நவம்பர் மாதம் ஃபுஜைன் மாகாணத்தில் கப்பல் ஒன்றில் பீரங்கிகளை ஏற்றும் போது ரசாயனம் கசிந்ததில் தொழிலாளர்கள் 52 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.