

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் சிங்கப்பூர் பிரதமர் ஹசியன் லுங், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரை மோடி சந்திக்க உள்ளார்.
சிங்கப்பூர் சென்றடைந்த மோடியை விமான நிலையத்தில் சிங்கப்பூர் அதிகாரிகளும், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களும் வரவேற்றனர்.
இந்த நிலையில் இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”மழைக்கு நடுவே சிங்கப்பூர் இந்தியர்கள் அருமையான வரவேற்பை வழங்கினர். இங்குள்ள இந்தியர்களின் அன்பால் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மிகவும் பெருமிதம் கொள்ள வைக்கிறார்கள். அவர்கள் உலகெங்கிலும் வெற்றி பெற்றவர்களாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தில் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, பிராந்திய நாடுகளுக்கான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகிய கூட்டங்களில் மோடி கலந்து கொள்கிறார்.
புதன்கிழமையன்று பிரதமர் மோடி நிதி, தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றி சிங்கப்பூர் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மோடியின் சிங்கப்பூர் பயணம் குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறும்போது, ''கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமர் ஹசியன் லுங் சந்திக்கிறார். மேலும் இன்று 12.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம்) அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை மோடி சந்திக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.