

காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, எகிப்தின் திட்டத்தை ஏற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலும் ஹாமாஸ் கிளர்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
காஸாவில் நேற்று மனித நேய அடிப்படையிலான உதவிகளை மக்களுக்கு செய்வதற்காக 7 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் போர் நிறுத்தம் முறிவானதால்இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இதனிடையே, எகிப்து அரசின் வலியுறுத்தல் காரணமாக, போர் நிறுத்தம் குறித்து நேற்று இஸ்ரேல் அமைச்சரவை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, தற்போது 72 மணி நேர போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் ராணுவ தலைமை தெரிவித்தது.
இதையடுத்து, போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தரைப்படை காஸா முனையின் வெளியே அனுப்பட்டதால், இந்த முன்னேற்றமானது முழுமையான சண்டை நிறுத்தத்திற்கான துவக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்தின் பேச்சுவார்த்தை அழைப்பை, ஹமாஸும் ஏற்றுக்கொண்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. அடுத்த மூன்று நாட்களில் எகிப்து நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை பாலஸ்தீனத்தில் நிலவும் போர்ச் சூழலை மாற்றி அமைக்கும் என உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை வீச்சை எதிர்க்கும் விதமாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி 'ஆபரேஷன் ப்ரொடெக்டிவ் எட்ஜ்' என்று பெயரிடப்பட்ட தனது ராணுவ தாக்குதலை தொடர்ந்தது.
கடந்த 4 வாரங்களாக நடந்து வரும் இருத்தரப்பு போரில் இதுவரை ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 1,900-க்கும் மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் 67 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவப் படைகள் தற்காலிகமாக வெளியேறி உள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லேர்னர் கூறினார். ஆனால், அடிப்படை சூழலில் முக்கிய ராணுவ குழுவினர் அங்கேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, "ஹமாஸ் போர் நிறுத்த விதியை மீறி ஏதேனும் ஒரு செயலில் ஈடுப்பட்டாலும் எங்களது ராணுவத்தினர் செயலில் இறங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.