Published : 14 Nov 2018 05:16 PM
Last Updated : 14 Nov 2018 05:16 PM

‘காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம்’: ஷாகித் அப்ரிடி பரபரப்பு கருத்து

4 மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம். அதேசமயம், இந்தியாவுக்கும் வேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பரபரப்பு கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக அந்நாட்டில் பொறுப்பேற்றபின் பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்கள் நடந்த வருகின்றன. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. எல்லை மீறி இந்தியாவில் தாக்குதல் நடத்துவதும், இந்தியா பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகுறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இங்கிலாந்தில் ’மாணவர்கள் நாடாளுமன்றத்தில்’ வேதனைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் சொல்கிறேன், பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அவ்வாறு சுதந்திரமாக செயல்பட்டால் குறைந்தபட்சம் மனிதநேயம் உயிருடன் இருக்கும்.மக்கள் உயிரிழப்புகளைச் சந்திக்காமல் இருப்பார்கள்.

4 மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம். அங்கு மிகப்பெரிய பிரச்சினையே மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனையானதாகும் இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஷாகித் அப்பிரிடி கருத்துத் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம்கூட கருத்துத் தெரிவித்திருந்தார். அப்போது டிவிட்டரில் அவர் வெளியிட்ட கருத்தில், இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீரில் கவலைக்கிடமான சூழல்நிலவுகிறது. சுயாட்சி மற்றும் சுதந்திரம் கேட்டு குரல் கொடுக்கும் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள். ஐ.நா சபை எங்கே இருக்கிறது, சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் எங்கே இருக்கின்றன. இந்த ரத்தக்களறியை தடுத்த நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x