

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான திடீர் ஏரியால், அப்பகுதி மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் நிலச்சரிவால் மீட்பு பணிகள் தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு மேற்குப் பகுதியில் யுன்னான் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு 6.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 398 பேர் பலியாயினர். நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் சில இடங்களில் தொடர் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது. இதனால் சுமார் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து சாலையோரங்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் ஜியான் பியான் கிராமத்தில் திடீர் ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டர் உயரம் என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியே ஏரியினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 800 பேரை மீட்புப் படையினர் வேகமாக வெளியேற்றி வருகின்றனர். இதே பகுதியில் 7 மின் நிலையங்கள் உள்ளதால் அவை அனைத்தும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக ஜிங்குவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட லூதியான் பகுதியின் முக்கிய சாலை ஒன்று முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி இடிபாடுகளில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் படுகாயம் அடைந்துள்ள மக்களுக்கு மருத்துகளை கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சீனாவின் யுன்னான் மாகாணம் கடந்த காலங்களில் நிலநடுக்கத்தால் மிக பெரிய சேதங்களை கண்டுள்ளது. கடந்த 2012- ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 81 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.