தீபாவளியில் ‘இந்து’க்களை மறந்த ட்ரம்ப்: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

தீபாவளியில் ‘இந்து’க்களை மறந்த ட்ரம்ப்: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்
Updated on
1 min read

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகும் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. நாடாளுமன்ற இடைத் தேர்தல், ட்ரம்ப் சுற்றுப் பயணம் போன்ற காரணங்களால் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறவில்லை.

எனினும் சில நாட்களுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, அமெரிக்க எம்.பி.க்கள், இந்திய வம்சாவளி தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதன் பிறகு தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்ரம்ப் கூறுகையில் ‘‘அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் புத்தர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்காக நாம் இங்கு கூடியுள்ளோம். பல கோடி மக்கள் அவர்கள் குடும்பங்களுக்காக இந்த தீபத்தை ஏற்றியுள்ளோம்’’ எனக் கூறியுள்ளார். இதனுடன் வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதனை படித்த நெட்டிசன்கள் பலரும் தீபாவளியை பண்டிகை இந்துக்கள் கொண்டாடுவது என்பது உங்களுக்கு தெரியாதா? என பதிவிட்டு அவரை கடுப்பேற்றினர்.

மேலும் சிஎன்என் செய்தியாளரும் இந்திய வம்சாவளியைச் சேரந்த மனு ராஜு ‘‘தீபாவளி என்பது இந்துக்கள் கொண்டாடும் முதன்மையான பண்டிக்கை’’ என ட்ரம்புக்கு பதிலளித்து பதிவிட்டார்.

இதையடுத்து தனது ட்வீட்டை உடனடியாக நீக்கிய ட்ரம்ப் இரண்டாவது புதிய பதிவை வெளியிட்டார். அதிலும் அதே வாசகம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்த முறையும் இந்துக்கள் என குறிப்பிடப்படாமல் இருந்தது.

இதனை குறிப்பிட்டு ராஜு தனது கண்டனத்தை பதிவு செய்தார். எதற்காக நீங்கள் ட்வீட்டை நீக்கிவிட்டு புதிய ட்வீட் செய்தீர்களோ. அதிலும் இந்துக்கள் என்ற வாசகம் இல்லை என பதிவிட்டார். அவரை தொடர்நது ஏராளமான இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப் ட்வீட்டுக்கு கீழே தொடர்ந்து பதிவிட்டனர். இதனால் இரண்டாவது ட்வீட்டையும் ட்ரம்ப் நீக்கினார்.

புதிதாக வாசகங்கள் அடங்கிய ட்வீட்டை மூன்றாவதாக பதிவிட்டார். அதில் ‘‘தீபங்களின் திருநாளான இந்துக்களின் தீபாவளி பண்டிகையை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை’’ என அந்த ட்வீட்டில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in