

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்ருதியும் துணைத் தலைவர் பதவிக்கு அவருடன் சேர்ந்து போட்டியிட்ட ஜூலியா ஹூசா (20) என்பவரும் வெற்றி பெற்றனர்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று கூறி ஸ்ருதி வாக்கு சேகரித்தார். இதற்கு மாணவர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.
தேர்தலில் ஸ்ருதியும் ஜூலியா வும் 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களை அடுத்து இரண்டாமிடம் பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. தற்போது இளங்கலை கவுன்சில் உறுப் பினர்களாக உள்ள ஸ்ருதியும் ஜூலியாவும் விரைவில் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளனர்.
ஸ்ருதியின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த 1992-ல் இவர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந் தனர்.