

சிங்கப்பூர் அரசின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் ‘லிட்டில் சிங்கப்பூர்’ என்று சொல்லுமளவுக்கு தொழில்வளம் மிகுந்த பகுதியொன்றை ஏற்படுத்த மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வந்துள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் மற்றும் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங்கையும் சந்தித்துப் பேசினார்.
அத்தலைவர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: “டெல்லி மும்பை இடையே தொழில் வளர்ச்சிப் பகுதியை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பகுதியில் சிங்கப்பூரைப் போன்று தொழில் வளம் மிக்க பகுதியொன்றை உருவாக்க அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களின் அருகே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 100 ஸ்மார்ட் நகரங்களை ஏற்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த புதிய நகரங்களில் குறைந்த விலையில் வீட்டு வசதி, கழிவுநீர் மேலாண்மை, எரிசக்தி சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிங்கப்பூரின் நிபுணத்துவம் பயன்படும். எனவே, இத்துறைகளில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.