காஸா பிரச்சினையால் இஸ்ரேலுடனான உறவு பாதிக்காது: அமெரிக்கா

காஸா பிரச்சினையால் இஸ்ரேலுடனான உறவு பாதிக்காது: அமெரிக்கா
Updated on
1 min read

பாலஸ்தீனத்தின் காஸா மீதான தொடர் தாக்குதலால் இஸ்ரேலுடனான அமெரிக்க உறவில் எவ்வித விரிசலும் ஏற்படாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலர் ஜான் எர்னஸ்ட் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வலியுறுத்தலையும் மீறி இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டதால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.

இந்நிலையில், அத்தகைய செய்திகளை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடன் பேசிய ஜான் எர்னஸ்ட்: "அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான உறவு வலுவானது. அந்த உறவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இஸ்ரேல் தங்களை தற்காத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் இருக்கின்றன, தங்கள் நாட்டு மக்கள் நலனுக்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது அந்நாட்டின் கடமையாகும்.

இப்பிரச்சினையில், இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அமர வைக்கும் முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். வன்முறை தொடரக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். அப்பாவி பொதுமக்கள் இருதரப்பிலும் பலியாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 72 மணி நேர ( 3 நாள்) போர் நிறுத்தத்தை இரு தரப்பும் மதித்து நடக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இஸ்ரேல் - பால்ஸதீன பிரச்சினைக்கு நீடித்த, நிலையான தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் சகி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in