

மலேசியாவில் தமிழர்களின் கோயில் ஒன்றை இடமாற்றம் செய்வது தொடர்பான பிரச்சினையில் ஒரு கும்பல் கோயிலில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய போலீஸார் தெரிவித்தனர்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், சுபாங் ஜெயா நகரில் நூறாண்டு பழமை வாய்ந்த சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. ‘எம்சிடி பெர்ஹத்’ என்ற கட்டுமான நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘ஒன் சிட்டி டெவலப்மென்ட்’ என்ற நிறுவனம் கோயில் நிலத்துக்கு உரிமை கோரி வருகிறது. கோயிலை அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு கும்பல் ஆயுதங் களுடன் கோயிலுக்குள் நுழைந்து பக்தர்களை வெளியேறுமாறு கூறி வன்முறையில் ஈடுபட்டது. வெளியில் இருந்த வாகனங்களுக்கும் தீவைத்தது.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மலேயர்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் இரவு கோயிலில் திரண்ட பக்தர்கள் அருகில் எம்சிடி பெர்ஹத் அலுவலகம் சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, இதனை இன மோதலாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரவாமல் தடுத்தனர்.
சிலாங்கூர் காவல்துறை தலைவர் மஸ்லன் மன்சூர் நேற்று கூறும்போது, “இந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கலவரத் தடுப்பு போலீஸார் 700 பேர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாக 21 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
இதனிடையே இந்த வன்முறையில் தங்களுக்கு தொடர்பில்லை என கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.
மலேசிய உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் கூறும்போது, “இந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பொதுமக்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” என்றார்.
பல்வேறு இன மக்கள் வாழும் மலேசியாவில் 1969-க்கு பிறகு இனக் கலவரம் அரிதாக உள்ளது. சுமார் 3 கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் மலேசியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மலேயர்கள் ஆவர். இவர்களுடன் பெருளவு சீனர்களும் சிறுபான்மையினராக இந்தியர்களும் அங்கு வசிக்கின்றனர்