Published : 08 Aug 2014 03:50 PM
Last Updated : 08 Aug 2014 03:50 PM

எபோலா தொற்று அபாயத்தால் சர்வதேச சுகாதார அவசரநிலை: ஐ.நா. அமைப்பு அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேகத்தில் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதை அடுத்து, சர்வதேச அளவிலான சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவி வருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், இந்த நோய் குறித்த அச்சம் உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்துள்ளது. இந்த நோயின் தாக்கம் தற்போதைய நிலையில் லைபீரியா, கினியா, சியேரா லியோன் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் இந்த நாடுகள் முழுவதிலும், மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதே போல, நைஜீரியாவில் எபோலா தொற்றின் அச்சம் காரணமாக, மருத்துவர்கள் தங்களது பணிகளுக்கு செல்லாமல் கடந்த ஒரு மாத காலமாக பணி ஓய்வு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1,700-க்கும் மேற்பட்டோருக்கு தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவிலான சுகாதார அவசரநிலை ஏற்பட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் மார்கரெட் சான் கூறும்போது , "எபோலா நோய் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. இந்த பாதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் காணாத மோசமான பாதிப்பாக உள்ளது.

புவியியல் ரீதியாக இந்த நோய் தொற்று எந்தெந்த நாடுகளில் பரவி உள்ளது, பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிவது என அனைத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

அமெரிக்க மருத்துவ அதிகாரிக்கு பாதிப்பு:

நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடான லைபீரியாவில், எபோலா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு பணிபுரிந்த அமெரிக்க மருத்துவ அதிகாரி ஒருவருக்கு நேற்று எபோலா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டி மற்ற நாடுகளை தாக்கும் அச்சம் மிக பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால், உலக சுகாதார மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

உகாண்டாவிலும் ஒருவருக்கு நோய் தொற்று:

உகாண்டாவில் இந்த நோய் அறிகுறிகள் உள்ள ஒரு நபர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து உகாண்டா வந்த நபர் ஒருவருக்கு எபோலா நோய் போன்ற அறிகுறிகள் தென்படுவதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உகாண்டா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதியில் ஒருவர் பலி:

சவுதி அரேபியாவில் ஒருவர் எபோலா நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக சந்தேகத்துக்குரிய செய்தி வந்துள்ளது. பலியானவரது இறப்புக்கு எபோலா தொற்று காரணமாக கண்டறியப்பட்டால், ஆப்பிரிக்க நாடுகளின் வெளியில் எபோலா தொற்றால் பலியான முதல் பதிவாக இது இருக்கும் என்பதால் அந்த நாட்டில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிப்பு இல்லை:

இந்தியாவில் எபோலா நோய் தொற்று பாதிப்பு எதுவும் இல்லை என்றும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

1976- ஆம் ஆண்டு காங்கோவில் முதன்முதலாக எபோலா நோய் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x