

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் அஷிம் மித்ரா, தன்னிடம் படிக்கும் மாணவர்களை வீட்டு வராண்டாவில் தங்க வைத்து, நாயை குளிப்பாட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அடிமைபோல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிசோரி - கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பார்மசி பேராசிரியராக பணியாற்றி வருபவர் அஷிம் மித்ரா. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர். இந்திய மாணவர்களை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை மித்ரா செய்து வந்துள்ளார்.
இவரது ஏற்பாட்டின் கீழ், இந்திய மாணவர்கள் பலர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில், பல்கலைக்கழகத்தில் தன்னிடம் படித்து வரும் மாணவர்களை வீட்டுவேலைக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. வார இறுதி நாட்களில் மாணவர்களை அழைத்து, தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, நாயை குளிப்பாட்டி உணவு கொடுத்தல், வீட்டின் சில பகுதிகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யுமாறு நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.
மேலும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருதல் போன்ற வேலைகளையும் செய்யுமாறு நிர்பந்தித்துள்ளார் சனிக்கிழமை வரும் மாணவர்களை வீட்டு வராண்டாவில் தங்க வைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை வாங்கியதாக தெரிகிறது. அவ்வாறு பணி செய்ய மறுத்த இந்திய மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும், கல்வி பாதியிலேயே நின்றுவிடும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 2016-ம் ஆண்டே சில மாணவர்கள் புகார் கூறினர். ஆனால் அப்போது பிரச்சினையை வெளியே தெரியாமல் மித்ரா மூடி மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மித்ராவுக்கு எதிராக மற்றொரு இந்திய பேராசிரியரான முகர்ஜி என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் மித்ராவின் செயல்பாடுகள் தொடர்பாக அமெரிக்க பத்திரிகைளில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர் காமேஷ் என்பவர் பேட்டிளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது, அடிமையாக நடத்தப்பட்டேன். இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களை பேராசிரியர் மித்ரா தவறாக பயன்படுத்தி வருகிறார்.
நவீன அடிமைத்தனத்திற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவர் சொல்லும் வேலைகளை செய்யவில்லை என்றால், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டினார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை பேராசிரியர் அஷிம் மித்ரா மறுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘மாணவர்களை வீட்டுக்கு அழைத்து கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்கினேன். அமெரிக்காவில் சரியான இந்திய உணவு கிடைக்காத மாணவர்களுக்கு எனது மனைவியே உணவு சமைத்து வழங்கினார். அவர்களிடம் நான் வீட்டுவேலை வாங்கியதாக திட்டமிட்ட வகையில் புகார் கூறுகின்றனர். ஆனால் என்னிடம் படித்த மாணவர்கள் யாரும் இதுபோன்ற புகாரை கூறவில்லை’’ என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவை பொறுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.