

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் சவுதியைச் சேர்ந்த ஐவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வலியுறுத்தப்படும் நிலையில் அந்நாட்டு நீதித்துறையை மன்னர் சல்மான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பொது நிகழ்வில் கலந்து கொண்ட சவுதி மன்னர் சல்மான் கூறும்போது, ”இஸ்லாமியத்தின் நீதி மற்றும் சமத்துவத்தை நமது அரசு கண்டுபிடித்துவிட்டது. நமது நீதிதுறை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். கடவுளின் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுவதில் எந்தத் தயக்கமும் காட்டாது என்று உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.
உலக நாடுகள் அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்து எந்தக் கருத்தையும் மன்னர் சல்மான் தெரிவிக்கவில்லை. மாறாக மன்னர் சல்மானுக்குப் பிறகு அடுத்த அதிகாரத்தில் இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதற்கான அறிகுறிகளை மன்னர் அளித்திருக்கிறார் என்று அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சவுதி அரசாங்கத்தின் கடும் விமர்சகரான பத்திரிகையாளர் கஷோகி, கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களை எடுத்துவர இஸ்தான்புல் சென்ற போது அங்கு சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் கஷோகி இறந்ததாக சவுதி கூறிவந்தது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாக மேலும் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி சவுதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க சவுதி ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.