ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் : ஐ.நா குற்றச்சாட்டு

ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் : ஐ.நா குற்றச்சாட்டு
Updated on
1 min read

சவுதி பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தன்னிச்சையாக விதிக்கப்படும் மரணத் தண்டனை குறித்து புகார் தெரிவிக்கும் சிறப்பு பதவியில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆக்னஸ் கால்மார்ட் கூறும்போது, ”சவுதி பத்திரிகையாளர் ஜமாலுக்கு அளித்திருப்பது மறைமுக மரண தண்டனையாகும். முதலில் ஜமால் தூதர அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

அதுவும் சவுதியின் தூதரக அலுவலகம். இரண்டாவது ஜமால் கொலையில் தொடர்புடைய அனைவரும் மாயமாகினர். அவர்கள் அனைவரும் சவுதியை சேர்ந்தவர்கள். இது அனைத்தும் ஜமால் மறைமுகமாக மரணத் தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இது அனைத்திறகு சவுதி அரசுதான் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது”  என்றார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட ஜமாலின் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி கடந்த வாரம்வெளியிட்டது.

ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி  குற்றம் சாட்டியது.

 ஜமால் கொல்லபட்டதை தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களை தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in