

சர்ச்சைகளுக்குப் பெயர்போன சவுதி அரேபியா அரசு, கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளுக்கிடையே தங்களது கடந்த காலம் குறித்தான கரும்புள்ளிகளை அகற்றச் சீர்திருத்த நடவடிக்கைகளை அதன் மன்னர் சல்மானும், அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானும் எடுத்து வந்தனர்.
குறிப்பாக, பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு உத்தரவுகளை சவுதி பிறப்பித்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. இதன் பின்னணியில் சவுதியின் அரசியல் மறைந்திருப்பதாக அந்நாட்டிலுள்ள அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வந்த வேளையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜமாலின் கொலை அரங்கேறியுள்ளது.
சவுதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக வன்முறைகள் நடந்தேறி வருகின்றன என்றாலும், ஜமால் விவகாரத்தில் சவுதியின் ரத்தம் படிந்த கரங்கள் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது.
ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதலில் அரப் நியூஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த அவர், இந்தத் தாக்குதல் சம்பவத்தை முஸ்லிம்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் அறிய முக்கிய ஆதாரமாக விளங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் மீது சர்வதேச ஊடகங்களின் வெளிச்சம் விழுந்தது.
சவுதி அரசை விமர்சித்து வந்ததன் காரணமாக இரண்டு முறை தனது ஆசிரியர் பதவியிலிருந்து ஜமால் நீக்கப்பட்டார். (சவுதி அரசைப் பொறுத்தவரை தனியார் பத்திரிகைகள் உட்பட அனைத்து பத்திரிகைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது). இதனைத் தொடர்ந்து சவுதியை விட்டு வெளியேறவும் ஜமால் முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை ஒன்றை ஜமால் எழுதியிருந்தார்.
இதுகுறித்து ஜமால் குறிப்பிடும்போது, ”நான் எனது நாட்டையும் குடும்பத்தையும், எனது வேலையையும் விட்டுச் செல்கிறேன். ஆனால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இங்கு பெரும்பாலானவர்களால் சொல்ல முடியாத செய்திகளை நான் கூறுவேன். சவுதி தற்போது எப்போதும் இல்லாத நிலையில் ஆட்சியில் மோசமாக இருக்கிறது. சவுதிக்கு வேறு ஒரு தகுதியான நபர் தேவை” என்று எழுதியிருந்தார்.
மேலும் ஏமன் போரில் சவுதியின் மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளை ஜமால் கடுமையாக விமர்சித்தார். ஏமன் மக்கள் வறுமையாலும், பசியாலும் வாடி வருகிறார்கள். சவுதி அரசர் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஜமால் வலியுறுத்தி வந்தார்.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானால் பத்திரிகைச் சுதந்திரம் சுருங்கி வருகிறது. எனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே ஜமால் தனது நண்பர்களிடத்திலும், சக ஊழியர்களிடத்திலும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான செய்தியை அரபின் செய்தி நிறுவனமான அல் ஜசிரா கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜமாலை சவுதியைச் சேர்ந்தவர்கள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்ததாக துருக்கி குற்றம் சாட்டிய நிலையில் சவுதி அதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது.சவுதிக்கு எதிராக வலுவான ஆதாரங்களைத் துருக்கி வெளியிட, சவுதியின் நட்பு நாடான அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் கை கொடுக்கத் தயங்கியதைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை சவுதி ஒப்புக் கொண்டது. அதுவும் சவுதி தூதரகத்தில் நடந்த தகராறில் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளது.
எனினும் ஜமாலை யார் கொன்றது? அவரது உடல் எங்கு உள்ளது என்பது குறித்து சவுதி வாய் திறக்கவில்லை. ஜமால் மரணம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமால் கொலை வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தை சவுதி ஒப்புக்கொள்ளுமா? அல்லது வழக்கம்போல் வழக்கை திசை திருப்புமா? என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனது அதிகாரத்தினாலும், செல்வாக்கினாலும் அரேபிய நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சவுதிக்கு ஜமாலின் மரணம் உலக நாடுகளிடையே பெரும் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in