புதிய வழிமுறைகளில் இந்திய உறவை மேம்படுத்த நவாஸ் ஷெரீப் விருப்பம்

புதிய வழிமுறைகளில் இந்திய உறவை மேம்படுத்த நவாஸ் ஷெரீப் விருப்பம்
Updated on
1 min read

இந்தியா உடன் நல்லுறவை மேம்படுத்த புதிய வழிமுறைகளைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இரு நாடுகளுக்கு இடையே சிக்கல் ஏற்படுவதற்கு காஷ்மீர் பிரச்சினையே முக்கிய காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் உரை நிகழ்த்திய அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப், "காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகான நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். இதன்மூலம் இரு நாட்டு உறவில் உள்ள சிக்கலை தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த புதிய வழிமுறைகளைக் ஆராய்ந்து தீர்வு காண விரும்புகிறோம்.

எங்கள் நாடு அமைதியான நாடு. இங்கு அமைதியை நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இதனையே நாங்கள் எல்லையிலும் நிலைநாட்ட விரும்புகிறோம். ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையிலும் அமைதி ஏற்பட வேண்டும். அப்போது தான் இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.

சமீப காலங்களில் இந்தியாவுடனான பிரச்சினைகள் கவலை அளிக்கின்றன. நாங்கள் அனைத்து எல்லை நாடுகளுடனும் சுமுக உறவையே ஏற்படுத்தவே எண்ணுகிறோம்" என்றார் நவாஸ் ஷெரீப்.

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதனை அடுத்து பிரதமர் மோடியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றதாக உள்ளது என்று பாகிஸ்தான் அரசும் தெரிவித்திருந்தது.

சமீப வாரங்களில், இந்திய எல்லைப் பகுதில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை இந்தியத் தரப்பும் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு உறவிலும் சிக்கல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in