

உக்ரைன் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோ தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடந்த 4 மாதங்களாக போரிட்டு வருகின்றனர். பல நகரங்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களுக்கு ரஷ்யா ஆயுத உதவி அளிப்பதாக உக்ரைன் மற்றும் உக்ரைன் ஆதரவு மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. ரஷ்யா தனது எல்லையில் படை வீரர்களை குவித்துள்ளதால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோ கூறும்போது, “கிழக்கு உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்யா மனிதாபிமான உதவிகள் அனுப்புவது தொடர்பாக எங்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு உக்ரைனில் இரு தரப்பும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வது மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பாக எங்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
உக்ரைனின் ஐரோப்பிய ஆதரவு புதிய தலைவர்கள் தொடர்ந்து தங்களை நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றனர். புதிது புதிதாக நிபந்தனைகளை விதிக்கின்றனர்” என்றார்.