

போதை மருந்து வைத்திருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜேசி சான் (32) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேசி சானும் அவரது நண்பரும் தைவான் நடிகருமான கே கோவும் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தனர். அங்கு சீன போலீஸார் நடத்திய சோதனையில் ஜேசி சானும் அவரது நண்பரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சீன போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பெய்ஜிங்கில் உள்ள ஜேசி சானின் வீட்டில் சீன போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு ள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2012-ல் வெளியான “டபுள் டிரபிள்” என்ற படத்தில் ஜேசி சான் நடித்துள்ளார். அவர் சிறந்த பாடக ரும்கூட. அவரது நண்பர் கே கோ தைவான் நாட்டின் பிரபலமான இளம் நடிகர் ஆவார்.
சீன அரசின் போதைப் பொருள் தடுப்பு கமிட்டியின் நல்லெண்ண தூதராக 2009-ம் ஆண்டில் நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டார். தற்போது அவரது மகனே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.