Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

சூப்பர் மேன் காமிக்ஸ் புத்தகம் ரூ.19 கோடிக்கு ஏலம்

சூப்பர்மேன் சித்திரக் கதை (காமிக்ஸ்) புத்தகம் மிக அதிகபட்சமாக ரூ.19 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

1938-ம் ஆண்டு சூப்பர்மேன் காமிக்ஸின் முதல் பதிப்பு வெளியானது. அப்போது ஒரு புத்தகத்தின் விலை ரூ.5. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த டேரன் ஆடம்ஸ் என்பவரிடம் முதல் பதிப்பின் ஒரு பிரதி இருந்தது. அதை இபே இணையதளத்தில் அவர் ஏலம் விட்டார். புத்தகத்தின் தொடக்க விலையை ரூ.60 (ஒரு டாலர்) ஆக அவர் நிர்ணயித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே புத்தகத்தின் ஏலம் சூடு பிடித்தது.

இறுதியில் நியூயார்க் டீலர்ஸ் மெட்ரோபாலிஸ் காமிக்ஸ் நிறுவனத்தினர் அந்தப் புத்தகத்தை ரூ.19 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். இதுகுறித்து டேரன் ஆடம்ஸ் கூறியதாவது: என்னிடம் இந்தப் புத்தகம் இருப்பது யாருக்கும் தெரியாது. மேற்கு வெர்ஜினியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த புத்தகத்தை வாங்கியுள்ளார். அவரது இறப்புக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் இருந்து நான் புத்தகத்தை வாங்கினேன். இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு புத்தகம் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

1933-ம் ஆண்டு ஜெர்ரி சீகல், ஜோ ஹஸ்டர் ஆகிய இளைஞர்கள் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கினர். அதனை அவர்கள் டி.சி. காமிக்ஸ் நிறுவனத்துக்கு அன்றைய விலையில் ரூ.7800-க்கு விற்றனர். ஆனால் இன்று அந்த புத்தகத்தின் ஒரு பிரதி மட்டும் ரூ.19 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் பதிப்பில் இன்னும் 100 புத்தகங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x