Last Updated : 09 Oct, 2018 06:28 PM

 

Published : 09 Oct 2018 06:28 PM
Last Updated : 09 Oct 2018 06:28 PM

இந்தியாவுக்கு போட்டி: பாகிஸ்தானுக்கு 48 அதிநவீன ஆளில்லா ராணுவ விமானங்களை விற்கிறது சீனா

பாகிஸ்தானுக்கு அனைத்துக் காலநிலையிலும் பறக்கக்கூடிய அதிநவீன 48 ஆளில்லா ராணுவ விமானங்களைச் சீனா அரசு விற்பனை செய்யவுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் மிகப்பெரிய ராணுவ தளவாடக் கொள்முதல் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சீனாவில் உள்ள செங்டு விமான தயாரிப்பு குழுமம், அரசுத்துறையும் இணைந்து இந்த ஆளில்லா ராணுவ விமானங்களைத் தயாரிக்கிறது. இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி, தாக்குதல் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

ரஷியாவில் இருந்து எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்து, கடந்த வாரம் டெல்லி வந்த ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆளில்லா ராணுவ விமானங்களைச் சீனா விற்பனை செய்ய உள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையின் ஷெர்தில் ஏரோபேட்டிக் குழு சீனாவில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்தவிவரங்களை தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால், விலை குறித்த விவரங்களைக் குறிப்பிடவில்லை.

மேலும், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்பிளக்ஸ் கம்ராவும், சீனாவின் செங்டு விமான கட்டுமான நிறுவனமும் இணைந்து ஆள்இல்லாம விமானங்களைத் தயாரிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜின்குவா அறிக்கையின்படி, பாகிஸ்தானுக்கு முதல்முறையாக விங் லூங் வகை ராணுவ ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு மாதிரி விமானமும் அனுப்பப்பட்டது.

அந்த ஆளில்லா ராணுவ விமானங்கள் மூலம் பாகிஸ்தான் பல்வேறு கட்ட சோதனைகளை செய்துள்ளது, இலக்குகளை குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை தாக்குதல், தரை இலக்குகளை தாக்குதல் போன்றவற்றை வெற்றிகரமாக செய்துள்ளதைத் தொடர்ந்து இந்த விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ராணுவ தளவாடவ விற்பனையில் அனுபவம் வாய்ந்தவரான சீனாவின் சாங் ஹாங்பிங் கூறுகையில், பாகிஸ்தான், சீனாவுக்கும் இடையே ராணுவத்துக்கான ஆளில்லா அதிநவீன விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நடந்துள்ளது உண்மைதான். விரைவில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவது குறித்து சீன அதிகாரிகள் பயிற்சி அளிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x