Published : 13 Oct 2018 10:43 AM
Last Updated : 13 Oct 2018 10:43 AM

அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் மொத்தம் 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று இந்தியா இந்த வெற்றியை பெற்றுள்ளது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர். 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கவுன்சில் செயல்படும்.

இதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் போட்டியிட்டன. ஒருவர் உறுப்பினராக தேர்வாக 97 வாக்குகள் பெற வேண்டும். அந்த வகையில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில், ஆசிய - பசிபிக் பகுதிக்கு என ஐந்து இடங்கள் உண்டு. இதில் 188 வாக்குகளை பெற்று இந்தியா தேர்வாகியுள்ளது. வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற நாடு இந்தியா. இந்தியாவுடன் சேர்த்து பக்ரைன், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், பிஜி நாடுகளும் ஐ.நா. மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பதவில் கூறுகையில் ‘‘ஐ.நா மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தம் 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே ஐ.நாவுக்கான இந்திய தூதர் செய்யது அக்பரூதின் கூறுகையில் ‘‘இந்தியாவின் ராஜ தந்திர முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அனைத்து நாடுகளுடனும் சமமான நேசத்துடன் பழகி வரும் இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x