

இலங்கை அரசியலின் பெரும் நெருக்கடி உடனடியாக அரசியல் சட்ட ரீதியாகத் தீர்க்கப்படவில்லையெனில் நிச்சயம் தெருக்களில் ரத்தக்களரி நிலையே ஏற்படும் என்று அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்ததை உடனடியாக வாபஸ் பெற்று உறுப்பினர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடனடியாகச் செயல்படுமாறு அதிபர் மைதிர்பால சிறிசேனாவுக்கு கரு ஜெயசூரியா வலியுறுத்தியுள்ளார்.
“பாராளுமன்றம் மூலம் இதற்குத் தீர்வு காண வேண்டும், தெருக்களுக்கு இட்டுச் சென்றால் பெரிய ரத்தக்களறியைத்தான் சந்திக்க வேண்டி வரும்” இன்று கொழும்புவில் செய்தியாளர்களிடன் ஜெயசூரியா தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கே பதவியை அனாவசியமாகப் பறித்து ராஜபக்சேவை நியமித்ததால் அங்கு பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டு மோதலில் ஒருவர் இறந்துள்ளார். ஆகவே ரணில் தன் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிறிசேனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
விக்ரமசிங்கேயும், “தற்போது பெரும் வெற்றிடமே உள்ளது, நாட்டை யாரும் ஆளவில்லை. எனவேதான் நாடாளுமன்றத்தைக் கூட்டி உடனடியாக எனக்கு இருக்கும் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோருகிறேன். நான் தான் இன்னமும் பிரதமராக இருக்கிறேன், எனக்குத்தான் மெஜாரிட்டி உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.