முதலையின் வாயில் சிக்கி போராடி மீண்ட சிறுவன்
அமெரிக்காவில் 9 அடி நீளம் கொண்ட முதலையின் வாய்க்குள் சிக்கிய 9 வயது சிறுவன், அதனுடன் கடுமையாக போராடி மீண்டுள்ளான்.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பார்னே (9) என்ற சிறுவன் கிழக்கு டொஹோ பெகலிகா ஏரியில் நீந்திக் கொண்டிருந்தான். அப்போது தன்னை ஏதோ இழுப்பதுபோல உணர்ந்தான். பின்னர் அவனது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தான் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்துள்ளான்.
பின்னர், தனது கைகளால் முதலையின் தாடையை வலுவாக பிடித்துக் கொண்டான். இதனால் முதலையால் தொடர்ந்து கடிக்க முடியவில்லை. இதற்கிடையே தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அதனிடமிருந்து திமிறி வாயிலிருந்து வெளியேறி கரையை நோக்கி வந்தபோது அங்கிருந்தவர்கள் அவனை மீட்டுள்ளனர்.
இதற்கிடையே முதலையின் வாயில் ஜேம்ஸ் சிக்கிக் கொண்டதை அறிந்த அவனது நண்பன், உடனடியாக அவசர உதவி மையத்துக்கு (911) தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளான். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது ஜேம்ஸ் கரை சேர்ந்துவிட்டான்.
அழுதுகொண்டிருந்த அவனது உடலில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, ஓர்லாண்டோவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஜேம்ஸை அனுமதித்தனர். அவனது உடலில் 30 பற்கள் பதிந்துள்ளதாகவும், அதில் 3 வலுவாக பதிந்துள்ள தாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் முதலையின் ஒரு பல் ஜேம்ஸின் உடலில் பதிந்து இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
முதலையின் அந்த பல்லை தனது கழுத்தில் டாலராக அணிந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளான் ஜேம்ஸ். ஆனாலும், அந்தப் பல் புளோரிடா மாகாண மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
