Published : 11 Oct 2018 02:34 PM
Last Updated : 11 Oct 2018 02:34 PM

ட்ரம்புக்கு அதிபர் தேர்தலில் போட்டியா? - நிக்கி ஹாலே ராஜினாமா குறித்து பரபரப்பு தகவல்கள்

தெற்கு கரோலினா கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான 44 வயது நிக்கி ஹாலே அமெரிக்க அரசியலில் கோலோச்சி வருபவர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக 2016-ம் ஆண்டு ஹாலே தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்கள் பலர் அமெரிக்க அரசியலில் சமீபகாலமாக முக்கிய இடம் பெற்று வரும் நிலையில் நிக்கி ஹாலே உயரிய பதவியை அடைந்தது புதிய திருப்பமாக பார்க்கப்பட்டது.

இதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதர் போன்ற மேல்மட்ட நிர்வாகப் பதவிக்கு முதன் முறையாக தேர்வுச் செய்யப்பட்ட பெண்ணாகவும் நிக்கி ஹாலே இருந்தார்.

நிக்கி ஹாலேயின் முன்னோர்கள், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவருடைய கணவர் மைக்கேல், ராணுவ கேப்டன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் பதவியை நிக்கி ஹாலே திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். அவர் ராஜினாமா குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

அதிபர் ட்ரம்ப் மற்றும் நிக்கி ஹாலே இடையே சமீபகாலமாக போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் குடியரசுக் கட்சியில் நிக்கி ஹாலே வளர்ந்து வருவது ட்ரம்புக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு போட்டியாக நிக்கி ஹாலே களமிறங்கக்கூடும் என தெரிகிறது.

அவ்வாறு நிக்கி ஹாலே போட்டியில் இறங்கினால் அந்த தேர்தலில் குடியரசு கட்சி ட்ரம்புக்கு பதிலாக நிக்கி ஹாலேயை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் பதவியில் இரண்டு முறை நீடிக்க முடியும் என்பதால் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் ட்ரம்ப் தீவிரமாக இருப்பதால் ஹாலேயை அரசியலில் இருந்து ஒதுக்க அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கூறுகையில் ‘‘நிக்கி ஹாலே சிறந்த நிர்வாகத் திறமை உடையவர். வெளியுறவு துறையில் அனுபவம் கொண்டவர். அனைத்து தரப்பினரும் ஏற்க்கூடியவர். குடியரசுக் கட்சியில் வளர்ந்து வரும் நபராக நிக்கி ஹாலே உள்ளார். அவர் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் போனாலும், ட்ரம்புக்கு பிறகு அவர் அதிபராக பிரகாசமான வாய்ப்புள்ளது’’ எனக் கூறியுள்ளளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x