போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததாக தகவல்

போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததாக தகவல்
Updated on
1 min read

72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. எனினும், எகிப்து நடத்திய பேச்சுவார்த்தையில் இதனை விவாதிக்கவில்லை என்று ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம், கடந்த 5-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தம் நாளை முடிவு பெறவுள்ளது. இந்தத் தருணத்தில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை எகிப்து தலைமையேற்று அதன் தலைநகர் கெய்ரோவில் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தும், ஐ.நா. சபையின் வேண்டுகோளை ஏற்றும் நாளை முடிவுபெற உள்ள போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

"வெள்ளிக்கிழமை முடிவுபெறுகிற போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தொடரும்" என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்தப் போர் நிறுத்த நீட்டிப்பு எவ்வளவு காலம் பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், எகிப்து மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கவில்லை என்று ஹாமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வார சண்டையில் காஸா போர் முனையில் 1,865 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதும், பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதும் வேதனை அளிக்கிறது என்றும், இந்த அழிவுக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in