

போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு வடகொரிய அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அடுத்த ஐரோப்பியா செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தில், வாடிகன் செல்லும் முன் அங்கு போப் பிரான்சிஸைக் காண இருப்பதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்ஸிசை வடகொரியா வரும்படி அழைப்பு விடுத்து அழைப்புக் கடிதம் ஒன்றை எழுதி அந்நாட்டின் சார்பில் கிம் தென்கொரியாவிடம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தென்கொரிய அதிபர் மூன்னின் செய்தித் தொடர்பாளர், கிம் எயிய்-கியாம் கூறும்போது, "போப் ஆண்டவருடனான சந்திப்பில் வடகொரிய அதிபர் கிம் அனுப்பிய செய்தி தெரிவிக்கப்படும். போப் பிரான்சிஸ் வடகொரியாவுக்கு ஒருவேளை வருகை தந்தால் அவரை வரவேற்க கிம் தயராக இருக்கிறார்” என்றார்.
கிம்மின் இந்த அழைப்பில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.
ஆனால், எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.