Published : 28 Oct 2018 08:34 PM
Last Updated : 28 Oct 2018 08:34 PM

சிறிசேனா ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி: இலங்கையில் வன்முறை

அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு நடந்து வரும் இலங்கையில் அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.

கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது. புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ரணில் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புள்ளது.

இதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி இருந்தார். நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜ பக்சே தோல்வியடையக்கூடும் என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

மேலும், ராஜபக்சேதான் பிரதமர் என்று அதிபர் சிறீசேனா ஒருபுறம் அறிக்கை வெளியிட்டார். அதேசமயம், ரணில் விக்ரமசிங்கேவும், அதிகாரப்பூர்வமான பிரதமர் நான்தான் என்று அவரும் பதிலுக்கு அறிக்கை வெளியிட்டதால், பெரும்அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நாட்டின் சட்டப்பூர்வமான பிரதமர் ரணில் விக்ரசிங்கே தான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகரித்துள்ளார். இதனால், பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க அலுவலகத்தில் இருந்து அமைச்சரின் பாதுகாவலர்கள் இன்று மாலை சில கோப்புகளை கொண்டு செல்ல வந்தனர். அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. அவர்கள் அதிபர் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள், சிறிசேனா ஆதரவு ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இதில் காயமடைந்த இரு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் அடுத்தடுத்து அரசியல் மோதலும், நெருக்கடியும் அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x