Published : 04 Oct 2018 08:46 AM
Last Updated : 04 Oct 2018 08:46 AM

வரி ஏய்ப்புக்கு மன்னிப்பு கோரினார் சீன நடிகை

வரி ஏய்ப்புச் செய்ததற்காக சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை பேன் பிங்பிங் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹாலிவுட்டில் வெளிவந்த எக்ஸ் மேன் - டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் என்ற படத்தில் நடித்தவர் சீன நடிகை பேன் பிங்பிங். மேலும் பல படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார். இவர் கடந்த ஜூன் மாதத்தின்போது மாயமானார். அப்போது முதல் தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிங்பிங் மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை ஜியாங்ஸு மாகாணத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வரி ஏய்ப்பு காரணமாக அவர் மாயமானதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் 682 கோடி ரூபாய் அபராதத் தொகையுடன் சேர்த்து 952 கோடி ரூபாய் வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில் நடிகை பேன் பிங்பிங், தான் வரி ஏய்ப்புச் செய்ததற்காக நேற்று மன்னிப்புக் கேட்டுள்ளார். 952 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற எச்ச ரிக்கை வந்த சில மணி நேரங்களில் இந்த மன்னிப்புச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

36 வயதான பேன் பிங்பிங் இதுகுறித்து கூறியதாவது: நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்த ரசிகர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்த தவறுக்காக இந்த சமூகம், நண்பர்கள், என் மீது அன்பு வைத்துள்ளவர்கள், பொதுமக்கள், தேசிய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் நல்ல கொள்கைகள், பொதுமக் களின் பேராதரவு, அன்பு இல்லா மல் இந்த நடிகை பேன் பிங்பிங் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் போல சீனாவில் பிரபலமாக இருக்கும் வெய்போ சமூக வலைதளத்தில் தனது மன்னிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பேன் பிங்பிங்குக்குச் சொந்த மான நிறுவனங்கள் ஜியாங்ஸு மாகாணத்தில் அமைந்துள்ளன. ஆனால் அந்த நிறுவனங்கள் அவரது பெயரில் செயல்பட வில்லை. ஆனால் அந்த நிறுவனங் கள் அவருடையதுதான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திரைப்படத்தில் நடித்தது, விளம்பரங்களில் நடித்தது என பல வழிகளில் வருவாய் மூலம் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற பெயரை பேன் பிங்பிங் பெற்றார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை அதிகம் சம்பாதிக்கும் சீன நடிகை என்ற தகவலை வெளியிட்டது. அவர் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.315 கோடி வருவாயை ஈட்டினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x