துருக்கியில் பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டு சிறை?

துருக்கியில் பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டு சிறை?
Updated on
1 min read

துருக்கியில் வாடிக்கையாளருக்கு ஒப்படைக்க வந்த பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கபடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் துருக்கியின் வடமேற்குப் பகுதியிலுள்ள எஸ்கிசஹிர் நகரில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்  முடிவில் குற்றச்சாட்டப்பட்ட டெலிவரி பாய்க்கு  18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து துருக்கி போலீஸார் தரப்பில், "18 வயதான புரக் என்ற அந்த இளைஞர், ஹுசையின் என்ற வாடிக்கையாளருக்கு வழங்கிய பீட்சாவில் எச்சில் துப்பி அதனை தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவுச் செய்திருக்கிறார்.

இந்த காட்சியை சிசிடிவி கேமராவில் பார்த்த ஹுசையின் உறவினர் அவரிடம் இதைப் பற்றி கூற இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு சுமார் 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை புரக் மறுத்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போதும் ”நான் பீட்சா டெலிவரி செய்ய இருக்கும் நபர் ஆர்டரின்போது எனது நண்பருடன் சண்டையில் ஈடுபட்டார். அதனால் அவர் சண்டைக்கார நபராக இருப்பார் என்று நினைத்து  நான் அந்த பீட்சா நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறிய அதன் பெட்டியை மட்டுமே திறந்து அதை புகைப்படம் எடுத்து என் நண்பனுக்கு அனுப்பினேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் ஹுசையினோ நான் பீட்சா ஆர்டர் செய்யும்போது எந்தவித சண்டயிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்த வழக்கில் வாடிக்கையாளரின் உணவை சேதப்படுத்திய குற்றத்துக்காக நுகர்வு நீதிமன்றத்தால்  புரக் சிறைத் தண்டனை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in