Published : 26 Oct 2018 08:18 PM
Last Updated : 26 Oct 2018 08:18 PM

வடிவேல் பட பாணியைவிட ‘காமெடி செய்த திருடர்கள்’: பெல்ஜியத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

திரைப்படங்களில் நடிகர் வடிவேல் தனது சகாக்களுடன் திருடச் சென்று சிக்கிக்கொண்டு அடி, உதை வாங்கும் காமெடிக் காட்சிகளைக் கண்டு ரசித்திருக்கிறோம். ஆனால், அதைக் காட்டிலும் என்ன மாதிரியான திருடர்கள் இவர்கள் என்று சொல்லி, சொல்லிச் சிரிக்கும் அளவுக்கு இந்தச் சம்பவத்தில் சிக்கிய திருடர்கள் கதை இருக்கிறது.

பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரின் தெற்குப்பகுதியில் உள்ளது சார்லிராய் நகரம். இந்த நகரில் ஒரு கடையில்தான் இந்த மகா காமெடி சம்பவம் கடந்த இரு நாட்களுக்கு முன் அரங்கேறியது.

சார்லிராய் நகரில் இ-சிகரெட் கடை நடத்தி வருபவர் டிடயர். கடந்த இரு நாட்களுக்குக் காலையில் தனது கடையைத் திறந்த சில மணிநேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் வந்தனர். அவர்கள் திடீரென கத்தி, துப்பாக்கி ஆகியவற்றைக் காட்டி டிடயரை மிரட்டி கடையில் உள்ள பணத்தை எடுக்குமாறு மிரட்டினார்கள்.

அதற்குக் கடையின் முதலாளி டிடயர், நான் கடையைத் திறந்து சிலமணிநேரம் மட்டுமே ஆவதால், பணம் இல்லை என்றார். ஆனால், கொள்ளையர்கள் பணம் இல்லாமல் அங்கிருந்து செல்ல முடியாது எனக் கூறி அவருடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் என்னிடம் தற்போது ஆயிரம் டாலர்கள் மட்டுமே இருக்கிறது. இதை வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.

கொள்ளையடிப்பதற்கு மதியம் 3 மணிக்கு வந்தால் என்னிடம் என்ன இருக்கும், ஆயிரம் டாலர்கள் தவிர என்னிடம் ஏதும் இல்லை. இதை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இரவு நேரத்தில் நீங்கள் வந்தால், கடையில் ஏராளமான பணம் இருக்கும் அப்போது அதிகமாக கொள்ளையடித்துச் செல்லலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், “புத்திசாலி” கொள்ளையர்கள், கடையின் முதலாளி சொன்னது உண்மைதான் என நம்பி தங்களுக்கு இப்போது ஆயிரம் டாலர்கள் தேவையில்லை இரவில் வருகிறோம். கடையில் பணத்தை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று மிரட்டிவிட்டுச் அங்கிருந்து புறப்பட்டனர்.

அந்தக் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றபின், டிடயர் பிரஷல்ஸ் நகர போலீஸாருக்கு தகவல் அளித்தார். மேலும், இங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி, இரவில் வரும்போது, போலீஸ் உடையில் இல்லாமல் இருக்குமாறு கூறினார்.

ஆனால், போலீஸாரும் நம்பவில்லை. திருடர்கள் கடையின் முதலாளியிடம் சொல்லிவிட்டா திருடுவார்கள், அல்லது கடையின் முதலாளிதான் பணத்தை வைத்துவிட்டுச் செல்வாரா என்று சொல்லி சிரித்தனர். இருந்தாலும், புகார் கொடுத்துவிட்டதால் என்ன நடக்கிறது, புத்திசாலி கொள்ளையர்கள் வருகிறார்களா என்று பார்க்க கடைக்குள் பதுங்கிக்கொண்டனர்.

 

ஆனால், வாக்குத் தவறாத புத்தாசாலிக் கொள்ளையர்கள் 5 பேர் இரவில் கடையை பூட்டும் நேரத்தில் மீண்டும் வந்தனர். இதைப் பார்த்த போலீஸாருக்கு வியப்பும், அதேசமயம், இப்படிப் போய் சிக்கிக்கொண்டார்களே என்ற பரிதாபத்துடன் திருடர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து, நையப்புடைத்தனர். பிடிபட்ட 5 கொள்ளையரில் ஒருவர் சிறுவன், இவர்கள் 5 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கடையின் முதலாளி டிடயர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

நான் திருடர்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இரவில் வாருங்கள் பணம் நிறைய இருக்கும் கொள்ளையடித்துச் செல்லுங்கள். இப்போது என்னிடம் இல்லை என்றேன். இதைத் திருடர்களும் நம்பிவிட்டார்கள்.

இதுபோன்ற காமெடித் திருடர்கள் நான் பார்த்ததே இல்லை. அதுமட்டுமல்லாமல் என் வார்த்தையை நம்பிச் சென்ற திருடர்கள் நிச்சயம் வருவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை பெல்ஜியத்தின் பெயரைக் கெடுக்க வந்த திருடர்கள். பெல்ஜியம் நாட்டிலேயே முட்டாள் திருடர்கள் என்றால் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

நான் போலிஸிடம் நடந்த சம்பவங்களைக் கூறியபோது அவர்கள் பலமாக சிரித்தார்கள். மீண்டும் கடைக்கு திருடர்கள் வருவார்கள் என நம்புகிறீர்களா என்று என்னைக் கிண்டல் செய்தனர். ஆனால், திருடர்கள் மகா முட்டாள்கள் நிச்சயம் வருவார்கள் நீங்கள் பிடிக்கலாம் என்று தெரிவித்தேன். ஆனால், திருடர்கள் வந்ததே போலீஸாரால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x