

ஏஎல்எஸ் எனப்படும் நரம்புச் சிதைவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, ஒரு பக்கெட் அளவு குளிர்விக்கப்பட்ட நீரை தலையில் ஊற்றிக் கொண்டார்.
அதேபோன்று குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக் கொள்ளும்படி, அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெஸோஸ், கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் ஆகியோரைப் போட்டிக்கு அழைத்து சவால் விடுத்தார்.
ஏஎல்எஸ் எனப்படும் ஒரு வகை நரம்புச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் போல் உடல் செயல்பாடு குன்றிவிடும். அவர்களின் மூளைத் திறனில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீவ் ஹாக்கின்ஸ் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.
இந்நோய் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக, முன்னாள் கால்பந்து வீரர் ஸ்டீவ் கிளீசன், குளிர்விக்கப்பட்ட நீரைத் தலையில் ஊற்றிக் கொள்ள சத்யா நாதெள்ளாவை ட்விட்டர் மூலம் போட்டிக்கு அழைத்திருந்தார். ஸ்டீவ் கிளீசன் ஏஎல்எஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது அறக்கட்டளை மூலம் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கிளீசனின் சவாலான அழைப்பை ஏற்றுக் கொண்ட சத்யா நாதெள்ளா, தனது சக பணியாளர்களின் உதவியுடன் தன் தலை மீது ஒரு வாளி நிறைய குளிர்விக்கப்பட்ட நீரை ஊற்றிக்கொண்டார். இந்நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பின்னர், “இதேபோன்று, குளிர்ந்த நீரை தலையில் ஊற்றிக் கொள்ளும்படி அமேசான் சிஇஓ ஜெப் பெஸோஸ், கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகி யோரை கேட்டுக் கொள்கிறேன்” என்று சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.