யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு: போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னடைவு

யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு: போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னடைவு
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் ரசாயன ஆலையில் விஷக் கசிவு ஏற்படுவதால் அதற்காக யூனியன் கார்பைடு நிறுவனம் மீது வழக்கு தொடுக்க முடியாது என்று நியூயார்க்கில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு போபால் ஆலை யில் 1984-ம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. போபால் நகர மக்கள் சார்பில் நியூயார்க்கில் உள்ள இந்த நீதிமன்றத்தில் எர்த்ரைட்ஸ் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்தது. போபால் ஆலையில் உள்ள விஷக் கழிவுகளால் போபால் பொது மக்கள் பயன்படுத்தும் தண்ணீர், நிலம் அனைத்தும் நச்சுத் தன்மைமிக்கதாக மாறிவிட்டது என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால் ஆலை நில உடைமையாளரான மத்தியப் பிரதேச அரசும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆலைப்பகுதியை சுத்தப்படுத்த மத்தியப் பிரதேச அரசு ஒத்துழைக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

‘போபால் ஆலையின் கட்டு மானத்தை யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் (யூசிசி) ஊழியர் தான் மேற்பார்வையிட்டார் என்பதற்கு போதிய ஆதாரம் இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி யூனியன் கார்பைடு நிறுவனம் மீது வழக்கு தொடுக்க முடியாது. யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளதால் நீதிமன்றத்தின் தவறான முடிவை அப்பீல் செய்து திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது’ என எர்த்ரைட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 30ம் தேதி அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கென்னன் 45 பக்க தீர்ப்பை பிறப்பித்தார்.போபால் ஆலையிலிருந்து விஷக் கழிவுகளை அகற்ற யூசிசிக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்றும் அந்த பணிக்கு மத்திய பிரதேசம் ஒத்துழைப்பு தரவேண்டும் என உத்தரவிடுமாறும் இந்த வழக் கில் கோரியுள்ளனர். ஆனால் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனை (யூசிசி) பொறுப்பாக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் விஷக் கழிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தர விடாது. எனவே மத்தியப் பிரதேசத்துக்கும் ஆணை பிறப்பிக்க முடியாது என தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் 1984-ம் ஆண்டு டிசம்பர் 2, 3ம் தேதிகளில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் 5000 பேர் மாண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in