Published : 22 Oct 2018 09:36 AM
Last Updated : 22 Oct 2018 09:36 AM

உண்மையைப் பேசுபவனை விடாது துரத்தும் மரணம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மரணத்தில் சவுதி அரசு மெல்ல வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறது.  தன்னுடைய துணிச்சலான கருத்துகளுக்காகவே வாழ்நாள் முழுக்க வேட்டையாடப்பட்டவர் கஷோகி. சவுதியில் அவர் ஆசிரியராக இருந்து நடத்திவந்த ‘அல் வதான்’ செய்தித்தாள் அவருடைய காலத்தில் சவுதியின் முற்போக்குக் குரலாக ஒலித்துவந்தது. முதலில், வஹாபியிஸத்தை விமர்சித்ததற்காகத் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார் கஷோகி. அடுத்து, சவுதியின் அரச மதமான சலாபியிஸத்தை விமர்சித்துக் கட்டுரை வெளியிட்டதற்காக வேலையிலிருந்தே நீக்கப்பட்டார். இதையடுத்து, ‘அல்-அராப்’ செய்தித் தொலைக்காட்சியைத் தொடங்கினார் கஷோகி. ஆனால், அதையும் அவரால் நடத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் பாதுகாப்பின்மையாலும் அச்சுறுத்தலாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி சவுதியிலிருந்து வெளியேறினார் கஷோகி. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அவர் வாழ்ந்துவந்தார். கடந்த அக்.2 அன்று ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்ற கஷோகியை அதன் பிறகு காணவில்லை. அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் அவர் கட்டுரை எழுதிவந்ததால், இந்த விஷயத்தில் அந்தப் பத்திரிகையும் தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களும் கஷோகி குறித்துக் கேள்வியெழுப்பத் தொடங்கின. இரண்டு வாரங்களுக்குப் பின்பு, சவுதி தூதரகத்தில் கஷோகி கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக துருக்கி அரசும் அறிவிக்க இப்போது மெல்ல இது தொடர்பில் எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறது சவுதி அரசு. கஷோகி மரணம் தொடர்பில் தன்னுடைய உளவுத் துறைத் தலைவர் உட்பட 18 பேரைக் கைதுசெய்திருப்பதாகவும் பத்திரிகையாளர் கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்காவுக்கு அது உறுதியளித்திருக்கிறது. கஷோகி ‘வாஷிங்டன்  போஸ்ட்’ பத்திரிகைக்குக் கடைசியாக எழுதிய கட்டுரை, அரபு நாடுகளில் கருத்துரிமை எப்படி ஒடுக்கப்படுகிறது என்பது தொடர்பிலானது. ஆனால், அந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முன்பே அவரது மரணச் செய்தி வெளியானதுதான் கொடுமை. உலகெங்கும் உண்மையைப் பேசுபவர்கள் அச்சுறுத்தலைத்தான் எதிர்கொள்கிறார்கள்.  ஆனால், சமூகத்தில் மக்களுக்கான நியாயம் அவர்கள் மூலமாகவே நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x