ஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல்

ஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல்
Updated on
1 min read

ஜமால் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியில் எர்டோகன் பேசும்போது, ”நாம் அனைவரும் இங்கு நீதியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் ஜமால் கொலையில் முழு உண்மையும் வெளியாகும்.  ஏன் சவுதியை சேர்ந்த 15 பேர் துருக்கிகு வர வேண்டும். அவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ஜமால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விளக்கத்தை சவுதி அளித்தே தீர வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து அந்த மூன்று நாடுகள்,  ”பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்த வன்முறை தாக்குதலையும்  நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.  ஜமால் வழக்கில் நாங்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் எங்கள் முடிவை எடுப்போம். இம்மாதிரியான சம்பவம் இன்னொரு முறை நடக்க கூடாது” என்று சவுதியை எச்சரித்துள்ளன.

ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in