

இந்தோனேசியாவில் சுலவேசி பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐக் கடந்துள்ளது.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பித்தவர்கள் குப்பைகளில் உணவும் மற்றும் தண்ணீரை தேடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. இதனால் பலு நகரில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200-ஐத் தாண்டி உள்ளது. காயமடைந்தவர்கள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பித்தவர்கள் அடிப்படைப் பொருட்களான உணவும் மற்றும் தண்ணீர் இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
சுனாமியில் ஒதுங்கிய குப்பைகளில் உணவு மற்றும் தண்ணீரை பொதுமக்கள் குழந்தைகளுடன் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எங்களுக்கு சுத்தமான உணவு வேண்டும்
இதுகுறித்து 23 வயது ரெகானா கூறும்போது,”நான் பலாரோவிலிருந்து வந்திருக்கிறேன். எங்கள் பகுதி நிலநடுக்கத்தால் தலைகீழாகப் புரண்டு கிடக்கிறது. இங்கு உணவு இருக்கிறது என்பதைக் கேட்டு நாங்கள் உணவைத் தேடி இங்கு வந்திருக்கிறோம்.
நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். அரசாங்கம் சார்ப்பில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவு முறையாக வழங்கப்படவில்லை. எங்களுக்குச் சுத்தமான உணவு மற்றும் தண்ணீர் தேவை" என்றார்.