Published : 08 Aug 2014 11:15 AM
Last Updated : 08 Aug 2014 11:15 AM

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

காஸா முனையில், இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 1,900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி இன்று முடிவடைகிறது. ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந்ததை உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நீட்டிப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை, இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறி வைத்து, 2 ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

"தெற்கு இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் 2 ஏவுகணைகளை வீசியது. இதில் சேதம் எதுவும் இல்லை" என்று இஸ்ரேல் பத்திரிகையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. இஸ்ரேல் தனது ட்விட்டர் பக்கத்திலும் "தீவிரவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டனர்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசவில்லை என்றும், இஸ்ரேல் தனது வசம் வைத்துள்ள பாலஸ்தீன பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்ரேல் இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்திருந்ததும், ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறினால் கடுமையான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x