

லெஸ்லி புயலின் கடும் தாக்குதலில் போர்ச்சுக்கல்லின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”போர்ச்சுக்கல்லில் கடந்த சனிக்கிழமை லெஸ்லி புயல் தாக்கியது. இதில் போர்ச்சுக்கல்லின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. நாட்டின் பல சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்ச்சுக்கல்லில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக லிஸ்பான், லைய்ரியா, கோய்ம்ரா, போர்டோ ஆகியவை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.